SALAAM

live tv

Monday, January 4, 2016

மறக்கப்பட்ட சுதந்திரப்போராட்ட வீரர் அமீர்ஹம்ஸா !

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நெருங்கிய நண்பரும் , அவர் கட்டமைத்த இந்திய தேசிய ராணுவத்தின் (INA) வீரர்களில் ஒருவருமான தியாகி அமீர் ஹம்ஸா அவர்கள் நேற்று இரவு காலமாகி , இன்று 4:30 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது .

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் கிராமத்திலிருந்து பர்மாவுக்கு சென்று வணிகம் செய்த குடும்பத்தில் பிறந்தவர் . இளம் வயதில் ரங்கூன் வீதிகளில் வலம் வந்தவர் . நேதாஜி ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்திய கிளர்ச்சியால் ஈர்க்கப்பட்டார் .

ஐரோப்பாவிலிருந்து ரகசிய நீர்மூழ்கி கப்பலில் சிங்கப்பூருக்கு வந்திறங்கிய நேதாஜி , அங்கு இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார் . பிறகு தாய்லாந்து வழியாக பர்மா தலைநகர் ரங்கூனுக்கு வந்து சேர்ந்தார் . 

அப்போது பர்மா வாழ் தமிழர்கள் அவரை வரவேற்று மகிழ்ந்தனர் . அலை , அலையாய் அவரது இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தனர் . 

அப்போது ராணுவ நிதி வசூலிப்பில் நேதாஜி தீவிரமாக இறங்கினார் . நேதாஜிக்கு கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள் ஏலம் விடப்பட்டன . அப்போது நேதாஜிக்கு விழுந்த மாலையை ராணுவ நிதிக்காக 2 லட்சம் ரூபாய்க்கு அமீர் ஹம்ஸா ஏலம் எடுத்தார் . அக்காலத்தில் 2 லட்சம் ரூபாய் எனில் இப்போது அது 10 கோடியாக மதிப்பிடலாம் . 

இதனால் நேதாஜியின் தனிப்பட்ட அன்புக்கு உள்ளானார் . INA படையில் இணைந்து மணிப்பூர் எல்லையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார். இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததும் , நேதாஜி மர்மமான முறையில் காணாமல் போனார் . INA படையின் போராட்டமும் முடிவுக்கு வந்தது . 

ஆங்கிலேயர்களினால் கைது செய்யப்பட்ட அமீர் ஹம்ஸாவுக்கு தூக்கு தண்டணை விதிக்கப்பட்டது . காந்தி , ஜின்னா , நேரு ஆகியோரின் முயற்சியால் இவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது . 

நாட்டுக்காக போராடிய இவரது சொத்துக்களும் , வணிகமும் இல்லாமல் போனது . பிறகு சென்னையில் குடியேறியவர் வறுமையோடு வாழ்ந்துக் கொண்டிருந்தார் . 

இவரைப் பற்றி கேள்விபட்டு 15 ஆண்டுகளுக்கு முன்னால் வட சென்னையில் உள்ள எளிமையான அவர் வீட்டுக்குச் சென்று உணர்வு பத்திரிக்கைக்காக சிறப்பு பேட்டி எடுத்தேன் . அதன் பிறகுதான் இப்படியொரு தியாகி இருப்பது சமுதாயத்திற்கு தெரிய வந்தது .

அதன்பிறகு நான்கு அல்லது ஐந்து முறை அவரை சந்தித்துள்ளேன் . ஒவ்வொரு முறையும் பர்மாவை பற்றியும் , விடுதலைப் போராட்ட நினைவுகள் குறித்தும் உற்சாகமாக பேசுவார் . 

நேதாஜியை பற்றி கூறும்போதெல்லாம் உணர்ச்சி வசப்படுவார் . அவரைப் பற்றிய பல அபூர்வ செய்திகளை கூறுவார் . அதில் ஒன்று ஜின்னா அவர்கள் நேதாஜிக்கு எழுதிய வரலாற்று சிறப்பு மிக்க கடிதமாகும் . “ நேதாஜி அவர்களே … உங்கள் தலைமையில் இந்தியா விடுதலை பெறுமேயானால் … நான் தனிநாடு கோரிக்கையை கைவிடுவேன் “ என்று ஜின்னா எழுதியிருந்ததை அமீர் ஹம்ஸா அவர்கள் என்னிடம் கூறினார் . 

பர்மாவில் நகைக்கடை வைத்திருந்த அவர் நாட்டு விடுதலைக்காக எல்லாவற்றையும் இழந்து தியாகி பென்ஷனுடன் வாழ வேண்டிய நிலைக்கு ஆளானார் . அவரது உறவினர்கள் சாதாரணமாகவே வாழ்கின்றனர் . 

சுதந்திரத்தின் பலன் மக்களுக்கு போய் சேராமல் , சுரண்டல்வாதிகளின் கைகளுக்கு போய்விட்டதே என வருந்தினார் . 

தியாகிகளுக்கு ஒதுக்கப்படும் அரசு உரிமைகளுக்காக பல அரசியல் தலைவர்களின் வீடுகளில் ஏறி இறங்கியதுதான் மிச்சம் .

நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்களும் , நாட்டை சுரண்டிக் கொண்டிருப்பவர்களும் நிறைந்த சூழலில் , அவரது மரணம் கூட கண்டுக் கொள்ளப்படவில்லை . 

நாட்டுக்காக போராடிய அந்த தியாகிக்கு அரசு மரியாதை அல்லவா கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் ?

இறைவனிடம் சென்றிருக்கும் தியாகி அமீர் ஹம்ஸா அவர்களே …
 உங்கள் வரலாற்றை பேரப்பிள்ளைகள் நாங்கள் முன்னெடுப்போம் !
 உங்கள் தியாகத்தை தேசப்பற்றோடு பரப்புரை செய்வோம் !

M.தமிமுன் அன்சாரி 
பொதுச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி

No comments:

Post a Comment