SALAAM

live tv

Monday, January 4, 2016

முதுபெரும் இடதுசாரி தலைவர் A.P.பரதன் மறைவு - மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்! (மமக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை)


சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றியவருமான மூத்த இடதுசாரி தலைவர் A.P.பரதன் அவர்கள் காலமானர் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது.நாடு ஒரு நல்ல தலைவரை இழந்திருக்கிறது.

ஒன்றுபட்ட இந்தியாவின் வங்க மாநிலத்தில் பிறந்த இவரது வாழ்க்கை, மஹாராஷ்டிராவில் தான் வளர்ந்தது. இவர் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் இடதுசாரி மாணவராக உருவெடுத்தார். அப்போது நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் போட்டியிட்டு V.C.ஷுக்லாவை தோற்கடித்தார். இவரிடம் தோற்ற V.C.ஷூக்லா தான் பின்னாளில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வனார்.

மாணவர் அரசியலில் தீவிரமாக பணியாற்றிய இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான அகில இந்திய மாணவர் பேரவையின்(AISF) தேசிய செயலாளராகவும் பணியாற்றினார்.

தொழிற்சங்கவாதியாகவும், உழைக்கும் மக்களின் போரளியாகவும் பொது வாழ்க்கையை நகர்த்தியவர், வாழ்வின் எந்த காலகட்டத்திலும் கொள்கைக்காக சமரசம் செய்துக்கொள்ளாதவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு தொழிற்சங்க பிரிவான AITUC-யின் அகில இந்திய பொதுச் செயலாளராக பணியாற்றிய போது தொழிலாளர்களுக்காக வலிமை மிக்க போராட்டங்களை முன்னெடுத்தார். தொழிலாளர்கள், பின்தங்கிய மக்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்காக வாழ்நாள் முழுவதும் போராடினார்.

RSS அமைப்பின் தலைமையகம் செயல்படும் நாக்பூரில் வளர்ந்த காரணத்தினாலோ : என்னவோ, மதவெறி சக்திகளுக்கு எதிராக தீவிரமாக இயங்கினார். இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதிலும், அது குறித்த விவாதங்களை எழுப்புவதிலும் அக்கறை காட்டினார். இவர் நாடாளுமன்றதுக்கு சென்றிருந்தால், பல திருப்புமுனைகளை ஏற்படுத்திருப்பார்.
  
எனினும் மராட்டிய சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் அவர் முன்வைத்த வாதங்கள் அனைத்தும் ஆவணங்களாகும்.

நான் டில்லி செல்லும் தருணங்களில், அவரை இரண்டு முறை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது சச்சார் கமிட்டி   பரிந்துரைகள் குறித்தும் , நாடு முழுக்க விசாரனையின்றி சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களின் நிலை குறித்தும் அவருடன் உரையாடிய நினைவுகள் மறக்க முடியாதவை. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக பணியாற்றிய இந்திரஜித் குப்தாவின் வழியில் 1996 முதல் 2008 வரை பன்னிரண்டு ஆண்டு காலம் கட்சியை வழிநடத்திய அவரது இழப்பு இடதுசாரி தோழர்களுக்கு ஈடுசெய்ய முடியாதது ஆகும். அவரது இழப்பில் வாடும் அனைவருக்கும்  மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


இவண்

M.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி.
03-01-2015

No comments:

Post a Comment