(மமக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி கடிதம்)
பேரன்புக்குரிய மனிதநேய சொந்தங்களே….!
ஏக இறைவனின் அமைதியும், சமாதானமும் உரித்தாகுக !
தமிழகத்தை போலவே உலகமெங்கும் ஓடியாடி உழைத்துக்கொண்டிருக்கும் நம் மனிதநேய சொந்தங்களுக்காகவே இம்மடலை வரைகிறோம் .
சொந்தங்களே ..!
நாம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக வெளிநாடுகளில் தமிழக-புதுச்சேரி மக்களிடையே நமக்கு கிடைத்திருக்கும் ஆதரவு புதிய பொறுப்புகளை நம்மீது சாட்டியிருக்கிறது.
நாள்தோறும் ஆங்காங்கே நமது சார்பு அமைப்பான மனிதநேய மக்கள் கலாச்சார பேரவை (மமக பேரவை) புதிய, புதிய கிளைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் அமீரக சுற்று பயணத்தின் போதுதான் வெளிநாடுவாழ் தமிழக மக்களுக்காக பயனுள்ள வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டோம் .
ஐக்கிய அரபு அமீரக நிர்வாகிகளுடன் நடைபெற்ற முழுமையான கலந்துரையாடலுக்கு பிறகு, ஜனவரி 10 அன்று துபையில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கினோம்.
எதிர்பார்த்ததை விட பன்மடங்கு ஆதரவு இதற்கு கிடைத்துள்ளது. நாங்கள் வாழும் நாடுகளிலும் இதை தொடங்கப் போகிறோம் என ஆங்காங்கே மமக பேரவையினர் களமாட தொடங்கிவிட்டார்கள். வெளிநாடு வாழ் தமிழக மக்கள், தங்கள் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயம் மலரப் போகிறது என்ற மகிழ்ச்சியில் நம்மை வாழ்த்தி பாரட்டி செய்தி அனுப்புகிறார்கள்.
சொந்தங்களே…!
ஏன் நாம் வெளிநாடு வாழ் தமிழக தொழிலாளர்கள் மீது இவ்வளவு அக்கரை காட்டுகிறோம் ? வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தால் நமது மக்கள் அயல்நாடுகளில் பட்ட துன்பங்கள் கண்ணீரை வரவழைக்கும்.
”திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு” என்ற முதுமொழிக்கேற்ப கடல் கடந்து சென்று உழைத்து, பொருள் தேடி அதைக்கொண்டு தங்களின் வறுமையை ஒழித்து, வாழ்வை மேம்படுத்திக் கொண்டார்கள்.
இலங்கை , பர்மா , சிங்கப்பூர் , மலேசியா,வியட்நாம் , புருணை , இந்தோனேஷியா , ஹாங்காங் , தாய்லாந்து என தென்கிழக்காசியவை நோக்கி கடல் கடந்து போனார்கள் . உழைத்தார்கள். எலும்பும், சதையும் வலிக்க, வலிக்க உழைத்தார்கள்.
பிறகு திசைகள் மாறியது. 1970-களுக்கு பின்னால் அரபு நாடுகளின் வாசல் திறந்து, பல்லாயிரக்கணக்கில் வேலை தேடி சென்றவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக பெருகியது.
குடும்பத்தை துறந்து நாடு கடந்து வாழும் இவர்களின் வாழ்க்கையை தூரத்தில் இருந்து பார்த்தால் முன்னேற்றமாக தெரியும். அருகில் சென்று விசாரித்தால் அவர்களின் கண்ணீரையும், வலிகளையும் கேட்க முடியும் .
சிங்கப்பூரின் அங்காடிகள், மலேஷியாவின் உணவகங்கள் மட்டுமின்றி அமீரகம், சவூதி, கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன் உள்ளிட்ட அரபு நாடுகளில் பாலைவன வெயிலில் தொழிலாளர்களாக அவர்கள் படும் துன்பங்கள், சிரமங்கள் ஏராளாம்!
கம்பெனிகளால் ஏமாற்றப்படுபவர்கள், நிறைவான சம்பளம் என நம்பி சென்று குறைவான கூலிக்கு வேலை செய்பவர்கள், முதலாளிகளால் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுபவர்கள், நோய்களால் அவதிப்படுபவர்கள், குடும்பப் பிரிவை தாங்க முடியாமல் தவிப்பவர்கள், ஓய்வு இல்லாமல் 15 மணிநேர வேலை செய்பவர்கள் என பலதரப்பட்டவர்களும் படும் இன்னல்கள் எராளம்.
இதுவெல்லாம் தாயகத்தில் உள்ள தங்கள் குடும்பத்திற்கு தெரியக்கூடாது என்பதற்காக, வேதனைகளை விழிங்கிக் கொண்டு, அலைப்பேசிகளில் செயற்கையாக தம் குடும்பத்தினரிடம் சிரித்துப்பேசும் அவர்களின் வாழ்க்கையை நினைத்தாலே வலிக்கிறது.
இப்படி கண்ணீரோடு அயல்நாடுகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான தமிழக தொழிலாளர்களின் நலன்கள் குறித்துவிவாதிக்கவும், அவர்களின் கோரிக்கைகளையும், வாழ்வாதார நலன்களையும் காதுகொடுத்து கேட்க அதிகார மையங்கள் ஆர்வம் காட்டவில்லை.
சொந்தங்களே..!
வெளிநாடு வாழ் தமிழர்கள் ஆண்டு தோறும் 40 ஆயிரம் கோடிக்கு மேல் தாயகத்திற்கு அனுப்புகிறார்கள் . இவர்களின் நலனுக்கு தமிழகத்தில் எவ்வித பெரிய திட்டங்களும் இல்லை. .
இந்தியாவிலிருந்து மொத்தம் 2.5 கோடி மக்கள் வெளி நாடுகளில் பணி புரிகின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் உடலுழைப்பு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களாவர். இதில் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்றனர்.
கேரள மாநில ஜிடிபி-யில் வெளிநாட்டில் வசிப்போரின் பங்களிப்பு 31.2 சதவீதமாக உள்ளது. கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழகமும் அதைத் தொடர்ந்து பஞ்சாப், ஆந்திர மாநிலங்கள் வருகின்றன . கடந்த ஐந்து ஆண்டுகளில் பண வரவு 8 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
தமிழகத்தை சேர்ந்த லட்சக்கணக்கானோர் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் 2 லட்சத்து 60 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர் ,சவுதி அரேபியாவிலும் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர் மற்றும் கத்தார் ,குவைத் ,மலேசியா சிங்கப்பூர் அமெரிக்கா ,இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தமிழகத்தை சேர்ந்தோர் பணி புரிய சென்றுள்ளனர்.
சொந்தங்களே..!
உற்றார் உறவினர்களை பிரிந்து பல்லாயிரம் கோடியை தாய் நாட்டிற்கு அனுப்பும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அவர்கள் தாயகம் திரும்பினால் தமிழகத்தில் அரசு சார்பாக அவர்களின் நலன் காக்க இது வரை பெரிய திட்டங்கள் எதுவுமில்லாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
கடந்த கால திமுக ஆட்சியின் போது வெளிநாட்டு வாழ் தமிழர் நலனை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் வெளிநாட்டு வாழ் தமிழர் நலச் சட்டம், 2011ல் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, வெளிநாட்டு வாழ் தமிழர் நலனுக்காக, தனி நிதியம் உருவாக்க வழி செய்யப்பட்டு. வாரியம் ஒன்றை உருவாக்கவும், சட்டம் அனுமதி அளிக்கிறது.
ஆனால் இதுவரை இச்சட்டம் செயல்படுத்தபடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் வெளிநாட்டு வாழ் கேரள மக்களுக்காக நார்கோ என்ற அரசு துறை செயல்பட்டுவருகிறது கூடுதலாக தனி அமைச்சகம் ஏற்படுத்தி எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு இடம்பெயர்ந்தோர் வள மையம் ஒன்று சென்னையில் அமைக்கப்பட்டு ரூ.1 கோடி சுழற்சி நிதியாக ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு செலவீனங்களுக்கு ரூ15 லட்சம் ஒதுக்கப்பட்டது.இம்மையம் ஐஏஎஸ் அதிகாரி ஆனந்த் தலைமையில் செயல்படுகிறது.ஆனால் இத்தொகை யானை பசிக்கு சோளபொறி என்பது போன்ற மிக குறைந்த தொகையாகும் .
அண்டை மாநிலமான கேரளாவில் Non-Resident Keralites’ Affairs Department (NORKA) என்ற துறை 1996ல் ஏற்படுத்தப்பட்டு இதற்கென அமைச்சர் நியமனம் செய்யபட்டு வெளிநாட்டு வாழ் கேரள மக்களுக்கான நலப்பணிகள் நடைபெறுகிறது கேரள மாநில முதல் அமைச்சர் மேற்பார்வையில் அனைத்தும் செயல்படுகிறது.
சொந்தங்களே...!
வெளிநாடுவாழ் இந்திய தொழிலாளர்கள் வேதனைகள் குறித்து கேரள அரசு மட்டுமே கவலைப்பட்டு, தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி அவர்களது நலன்களை பேணுகிறது.தமிழகத்திலும் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க தனி அமைச்சகம் உருவானால் தான், அவர்களது வாழ்வுரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு மமக பேரவை ஐக்கிய அரபு அமீரகம் துபையில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இப்போது வளைகுடா முழுக்க இப்பணிகள் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது .
சமூக இணைய தலங்களின் மூலம் மமக பேரவையினர் முன்னெடுத்திருக்கும் பரப்புரை வெளிநாடு வாழ் தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளாது.
எங்களுக்கு இது குறித்து நிறைய அலைபேசி அழைப்புகளில் பல சமூக மக்களும் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கு கிடைத்திற்கும் ஆதரவை பயன்படுத்தும் வகையில் இக்கையெழுத்து இயக்கம் பிப்ரவரி 20 வரை நீட்டிக்கப்படுகிறது .
எனவே ஆசிய நாடுகள் எங்கும் இப்பணியை மமக பேரவை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இறுதியாக அந்தந்த நாட்டு இந்திய தூதர்கள் மூலம் அக்கையெழுத்து படிவங்கள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
சொந்தங்களே..!
நமது முயற்சிகள் வெற்றிபெற்று தமிழகத்தில் தனி அமைச்சகம் அமையுமேயானால் கீழ்க்கண்ட நன்மைகள் கிடைக்கும் .
• வெளிநாட்டு விசாவும், வேலை செய்யும் அனுமதியும் கிடைத்தவுடன் அவர்களுக்கு காப்பீடு (இன்சூரன்ஸ்) செய்துக் கொடுப்பது.
• குறைந்தபட்ச சம்பளமாக ஒரு தொகையை வெளிநாட்டு வேலை அளிக்கும் நிருவனங்களுக்கு அரசே நிர்ணயிப்பது.
• வெளிநாடுகளில் பணிபுரியும் போது விபத்து அல்லது பெருநோயில் சிக்கும் தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் இலவச உயர்சிகிச்சை ஏற்பாடு செய்வது.
• போர் அல்லது அவசர காலங்களில் நிர்பந்தமான நிலையில் நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு தொழில் தொடங்க வசதி செய்துக் கொடுப்பது மற்றும் இடைக்கால உதவித்தொகைகள் வழங்குவது.
• வெளிநாடுகளில் பணியின் போது விபத்தில் இறக்கும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார நிதி வழங்குவது.
• வெளிநாடு வாழ் தமிழக தொழிலாளர்களுக்காக 24 மணிநேர உதவிமையம் திறப்பது .
• போலி ஏஜென்சிகளை கண்டறிந்து தடுப்பது .
• இறந்தவர்களின் உடலை குறைந்த செலவில் தாயகத்திற்கு கொண்டு வருவது .
இப்படி எண்ணற்ற சலுகைகளை வெளிநாடுவாழ் தமிழக மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காகவே இக்கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறோம் . உங்களின் ஒவ்வொரு கையெழுத்தும் மதிப்புமிக்கது என்பதை உணர்ந்து இதற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் .
M. தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி
04-02-2016


No comments:
Post a Comment